சரக்கடிச்சா போதை வரும்.. போலீஸையே அடிச்சா.. வம்பு வழக்கு வரும்..! காணும் பொங்கல் கலாட்டா
Published : Jan 18, 2024 6:43 AM
சரக்கடிச்சா போதை வரும்.. போலீஸையே அடிச்சா.. வம்பு வழக்கு வரும்..! காணும் பொங்கல் கலாட்டா
Jan 18, 2024 6:43 AM
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மலையடிவாரத்தில் இரு தரப்பு மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளரை வளைத்துப்பிடித்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஒரு தரப்பிடம் சிக்கி தாக்குதலுக்குள்ளான காட்சிகள் தான் இவை..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மலையடிவாரத்தில் காணும் பொங்கல் திருநாளையொட்டி செஞ்சியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், சிங்கவரம் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதலாக மாறிய நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது.
அதில் ஒரு இளைஞர், நீ எப்படி என்னைத் தாக்கலாம்? என ஒருமையில் பேசி உதவி ஆய்வாளரின் சட்டையைப் பிடித்துக்கொள்ள கும்பலாகச் சேர்ந்து கையைப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான உதவி ஆய்வாளர் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
போதையில் மோதலில் ஈடுபட்டதோடு, தடுக்க வந்த போலீஸையும் தாக்கிய புகாரில் 6 பேரை கைது செய்த போலீசார், செஞ்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
காணும் பொங்கலில் கலாட்டா செய்து, போலீசிடம் சிக்கி உள்ள 6 பேர் மீதும் உள்ள பழைய வழக்குகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்